மும்பையின் ஜுஹூ பகுதியில் பிரபல பொலிவூட் நடிகர் டைகர் ஷெரொப் பயணித்த கார் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் மற்றும் கூடுதல் விபரங்கள் வெளியாகியுள்ளன.
நேற்று மாலையில் கால்பந்து மைதானத்தில் இருந்து தனது காரில் டைகர் ஷெரொப் திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த கொலை முயற்சி அரங்கேறியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், டைகர் ஷெரொப் சென்ற காரின் முன்பக்கக் கண்ணாடி மற்றும் பக்கவாட்டுக் கண்ணாடியை நோக்கி குறைந்தபட்சம் 4 முதல் 5 முறை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
தாக்குதலின் போது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவரின் துப்பாக்கி, டைகர் ஷெரொபின் ஜன்னல் அருகில் நெருங்கி இறுதிச் சுற்றைச் சுட முயன்றபோது திடீரென பழுதுபட்டு மறித்துக்கொண்டது.
இதனால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு டைகர் ஷெரொப் காயமின்றி உயிர் தப்பினார். எனினும், இந்தத் தாக்குதலில் காரின் ஓட்டுநர் காயமடைந்தார்.
உடனடியாக அவர் காரை விட்டு வெளியேறிய நிலையில், நடிகர் டைகர் ஷெரொப் பயணிகள் இருக்கையிலிருந்து ஓட்டுநர் இருக்கைக்கு மாறி காரை இயக்கி அங்கிருந்து தப்பினார். காயமடைந்த ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அருகில் இருந்த மற்றொரு நபரும் காயமடைந்துள்ளார்.
நடிகர் சல்மான் கானுடன் நடிகர் டைகர் ஷெரொப் தொடர்பில் இருப்பதைக் காரணம் காட்டி, பிரபல குற்றக் குழு உறுப்பினர் லாரன்ஸ் பிஷ்னோய் குழுவினர் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.
அனில் பண்டிட் என்ற பெயரில் வெளியான ஓடியோ கிளிப்பில், தங்களது உத்தரவைக் கேட்காததாலும், சல்மான் கானுடன் இணைந்து பணியாற்றியதாலும் டைகர் ஷெரொப் ஹிட் லிஸ்டில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சல்மான் கானுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்களின் தொடர்ச்சியாக இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ள நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
மாநில அரசும் இந்தச் சம்பவம் குறித்து விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளது.


















