-நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார்-
இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் மிகவும் மோசமான சபாநாயகர் தற்போதுள்ள சபாநாயகர் ஆவார். மஹிந்த யாப்பா அபேரத்னவை விட இவர் முற்று முழுதாக ஒரு பக்க சார்பாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். அது மாத்திரமின்றி அவர் மீது ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனவே தேசிய மக்கள் சக்தியினர் அனைவரும் தூய்மையானவர்கள் என இனி ஜனாதிபதி உட்பட எவராலும் பெருமை பேசிக் கொண்டிருக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார். பாக்கீர் மாக்கார், கரு ஜயசூரிய போன்ற சபாநாயகர்களின் செயற்பாடுகளை நாம் பார்த்திருக்கின்றோம். அவர்கள் மிகவும் சுயாதீனமான முறையில் நாடாளுமன்ற செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.
தற்போதைய சபாநாயகருடன் ஒப்பிடுகையில் ராஜபக்ஷ குடும்பத்தின் சமல் ராஜபக்ஷவின் செயற்பாடுகள் இவற்றை விட சிறந்தது எனக் கூறலாம். அதேவேளை மஹிந்த யாபா அபேவர்தன முற்று முழுதாக பக்க சார்பாகவே செயற்பட்டார். தற்போதைய சபாநாயகர் அவரை விடவும் மோசமானவர் என அவர் மேலும் தெரிவித்தார்.


















