-அதிவிசேட வர்த்தமானி வெளியீடு-
இலங்கையின் இரண்டாவது பெரிய வனப்பகுதியான ‘நில்கல’ காப்பகம் உத்தியோகபூர்வமாக பாதுகாக்கப்பட்ட வன ஒதுக்கீடாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது.
சுமார் 40,684.99 ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்ட இந்த வனப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வலயமாக்கும் நடவடிக்கை, 2025 ஆம் ஆண்டு உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு தேசிய வனப்பரிபாலன திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டதாக சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி தெரிவித்துள்ளார்.
இந்த பிரகடனத்தின் முக்கியத்துவம் குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:
நாட்டின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்கும் சுற்றாடல் சீர்கேட்டைக் குறைப்பதற்கும் எடுக்கப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக இது அமையும்.
இலங்கை போன்ற வெப்பமண்டல நாடுகளுக்கு இவ்வாறான வனப்பகுதிகளைப் பாதுகாப்பது சுற்றாடல் சமநிலைக்கு மாத்திரமன்றி, வனவிலங்குகளுக்கான நிலையான வாழ்விடங்களை உருவாக்குவதற்கும் அவசியமானதாகும்.
மனிதர்களும் இயற்கையும் இணைந்து வாழக்கூடிய பசுமையான தேசத்தை நோக்கிய பயணத்தை இது மேலும் வலுப்படுத்துகிறது.
எதிர்கால சந்ததியினருக்காக பசுமையான சூழலை உருவாக்குவதற்கும், நிலையான உயிர்ச்சூழலை கட்டியெழுப்புவதற்கும் இலங்கை கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்த தீர்மானம் மீள உறுதிப்படுத்துவதாக அமைச்சர் தம்மிக பட்டபெந்தி மேலும் சுட்டிக்காட்டினார்.


















