-பெலவத்தை அதிகார அமையமல்ல – ரணில்-
நாட்டுக்கான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளது. ஜே.வி.பி தலைமையகமான வெலவத்தை அலுவலகத்திற்கு கிடையாது என கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜே.வி.பிவியின் அரசியல் குழு நாட்டின் நிர்வாக அதிகாரத்தை கையாள முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு – 7 இல் அமைந்துள்ள அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்தும் குறிப்பிடுகையில், பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) அரசியல் குழுவால் தான் தற்போது நாட்டின் நிதி உள்ளிட்ட அனைத்து நிர்வாகங்களும் தீர்மானிக்கப்படுகிறது. இதனை அனுமதிக்க முடியாது. பாராளுமன்ற அதிகாரத்தை இழிவுப்படுத்தும் இத்தகைய செயல்பாடுகளை தடுக்க எதிர்க்கட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேவேளை தீத்வா சூறாவளி அழிவுகளில் இருந்து மீள அரசாங்கத்திற்கு அனுபவம் குறைவாகவே உள்ளது.
எனவே பேரிடர் மேலாண்மை மற்றும் புனரமைப்புக்கான கண்காணிப்புக் குழுவை பாராளுமன்றத்தால் நியமிப்பது பொருத்தமானது. அதன் தலைமைப் பதவியை அனுபவம் வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வகிக்க வேண்டும். அத்துடன் புனரமைப்பிற்கு வழிகாட்டுவதற்காக, அனைத்து மத மற்றும் அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு துறைகளில் முன்னணி வகிக்கும் பிரமுகர்களை கொண்ட ஒரு சிறப்பு குழுவை நியமிக்க வே ண்டும். இந்தக் குழுவின் முதல் கூட்டத்திற்கு நாட்டின் நான்கு மகாநாயக்க தேரர்கள் தலைமை தாங்கினால், அது ஒரு பெரிய பலமாக இருக்கும். ஏனைய பிரதான மதத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட வேண்டும்.
அப்போதுதான் பொதுச் சமூகத்தில் ஒரு நல்ல நிலைப்பாடு உருவாகும். பேரிடருக்குப் பிறகு, 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டதால், பேரிடர் பணிகளை ஒப்படைக்கப்பட்ட அனைத்துத் திணைக்களங்கள், அரச பிரிவுகள் மற்றும் ஏனைய அதிகாரிகள் செயலற்றவர்களாகி விட்டனர்.
பாராளுமன்றம், அமைச்சரவை மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டு, உதவிகளை வழங்குவதில் அரசியல்மயமாக்கலைச் செய்ய முயற்சிக்கிறது. மற்றொரு சமாந்த ரமான நிவாரண நிதியையும் நிறுவியும் உள்ளது. இந்த அழிவை எதிர்கொள்ள அரசாங்கத்திடம் ஒரு வியூகம் இல்லை என்பதே யதார்த்தமான உண்மையாகும்.
இன்னும் யார் இறந்தார்கள்? யார் காணாமல் போனார்கள்? என்று கூட முழுமையாக கண்டறியப்படவில்லை என்றார்.
















