-விநியோகத்தை சீர்படுத்தவே QR நடைமுறை-
நாட்டில் எரிபொருள் விநியோகத்திற்கான QR நடைமுறை மீள நடைமுறைப்படுத்தப்பட்டது எரிபொருள் தட்டுப்பாட்டினால் அல்ல. என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்தார்.
எரிபொருள் விநியோக நடைமுறைகள் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
அவசர தேவை உருவாகும் பட்சத்தில் அதனை பெற்றுக் கொள்வதற்காக, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. அந்தப் பேச்சுவார்த்தைகள் மிகவும் வெற்றிகரமாக அமைந்துள்ளது. முன்னதாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட QR குறியீடுகளைத் தற்போதும் பயன்படுத்த முடியும்.
இதுவரை QR குறியீடு இல்லாதவர்கள், வாகனத்தின் உரிமையாளர் மாறியவர்கள் அல்லது தொலைபேசி இலக்கம் மாறியவர்கள் fuelpass.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகப் பதிவு செய்துகொள்ளலாம். இன்று முதல் QR குறியீடு இல்லாமல் எரிபொருள், வழங்கப்படமாட்டாது.
கடந்த சில நாட்களாகப் பொதுமக்கள் எரிபொருளைச் சேமிக்க ஆரம்பித்ததாலும், சில ஊடக அறிக்கைகளாலும் எரிபொருள் வரிசைகள் உருவானது. இது ஒரு ஆபத்தான நிலையை உருவாக்கக்கூடும் என்பதால், மக்கள் வரிசைகளில் காத்திருப்பதைத் தவிர்த்து, முறையாக எரிபொருளைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துவதே இந்த QR முறை செயல்படுத்தப்பட்டதன் பிரதான நோக்கமாகும் எனத் தெரிவித்தார்.


















