-நாமல் அழைப்பு-
நாட்டிலுள்ள அரசியல்வாதிகள் தொடர்பில் மக்கள் மத்தியில் குறிப்பாக இளையோர் மத்தியில் நல்ல நிலைப்பாடு இல்லாத நிலையில், சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க இளையோர் எம்முடன் கை கோர்க்க வேண்டும் என நாடாளமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
களனியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், நாட்டு மக்கள் பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள். ஆனால் மக்களின் எதிர்பார்ப்பு இன்று கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தை நாங்கள் நெருக்கடிக்குள்ளாக்கவில்லை. மாறாக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறே வலியுறுத்துகிறோம்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தினார் என்பதை எவராலும் மறுக்க முடியாது. பல்வேறு காரணிகளால் திட்டமிட்ட வகையில் பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டது. தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்குரிய எவ்வித திட்டங்களையும் அரசாங்கம் செயற்படுத்தவில்லை. கொழும்பு துறைமுக நகரத்தை உருவாக்குவதற்கு சீகிரியா குன்றையும் பெயர்த்தெடுக்க வேண்டும் என்றார்கள். தற்போது துறைமுக நகரம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் சீகிரியா குன்று அழிக்கப்படவில்லை.
கொழும்பு துறைமுக நகரத்தில் இருந்து உச்சப்பலனை பெற்றுக்கொள்ள வேண்டும். வெளிநாட்டு முதலீடுகளை அதிகளவில் பெற்றுக்கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் சகல திட்டங்களையும் விமர்சிக்கும் மனநிலையில் நாங்கள் இல்லை. சிறந்த திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.
இலங்கைக்கே உரித்தான பொருளாதார அம்சங்களுடன் தான் நாடு என்ற ரீதியில் நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். அதற்கான திட்டங்களை எமது ஆட்சியில் நாங்கள் செயற்படுத்துவோம். பொருளாதாரத்தை முன்னேற்றுவோம் என்றார்.


















