உலக சுகாதார ஸ்தாபனத்தால் வெளியிடப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான சுகாதார தரவுகளுக்கமைய, இலங்கையில் உள்ள வயதானவர்களில் 34 சதவீதமானோர் இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அர்ஜூன திலககரத்ன தெரிவித்தார்.
அம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலைக்கான புதிய இதய வடிகுழாய் பிரிவின் கட்டட அடிக்கல் நாட்டு விழா நேற்றுமுன்தினம் சம்பிரதாயபூர்வமாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பங்கேற்ற சுகாதார (வைத்திய சேவை) பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அர்ஜூன திலகரத்ன தெரிவிக்கையில்,
உலக சுகாதார ஸ்தாபனத்தால் வெளியிடப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான சுகாதார தரவுகளுக்கமைய, இலங்கையில் உள்ள வயதானவர்களில் 34 சதவீதமானோர் இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு அடையாளம் காணப்படும் நோயாளர்களில் 25 சதவீதமானோர் மாத்திரமே உரிய சிகிச்சைகளைப் பெற்று நோயைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பதாகவும் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
மாதாந்த சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குச் சமூகமளிப்பவர்களில் அதிகளவானோர் இருதய நோயாளிகளாவர்.
ஆகையால், இருதய வடிகுழாய் பிரிவு போன்ற சிகிச்சைப் பிரிவுகளின் தேவை அதிகரித்துள்ளது. அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் ஸ்தாபிக்கப்படவுள்ள இந்த சிகிச்சைப் பிரிவின் மூலம் கொழும்பு மற்றும் காலி கராபிட்டிய தேசிய வைத்தியசாலைகளுக்கு விசேட இருதய சிகிச்சைக்காக அனுப்பப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்துக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றார்.


















