நாட்டின் சில பகுதிகளில் உள்ள பன்றிப் பண்ணைகளில் ஆபிரிக்க பன்றி காய்ச்சல் மீண்டும் பரவியுள்ளதுடன், சோதனை செய்யப்பட்ட பன்றிகளில் சுமார் 200 பன்றிகளுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, அநுராதபுரம், கண்டி மற்றும் புத்தளம் ஆகிய 06 மாவட்டங்களில் உள்ள 48 பண்ணைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போதே இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது.
சுமார் 1,200 பன்றிகள் பரிசோதிக்கப்பட்டதில், சுமார் 200 பன்றிகளுக்குத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் இந்த நோயைக் கட்டுப்படுத்துவதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் சில இடங்களில் இது தீவிரமடைந்துள்ளதாகத் திணைக்களத்தின் தலைமை தொற்றுநோயியல் வைத்திய நிபுணர் பிரதீப் லேக்பிரிய குமாரவடு தெரிவித்துள்ளார்.
ஆபிரிக்க பன்றி காய்ச்சல் ஒரு மனிதருக்குப் பரவும் நோய் அல்ல என்பதால், இது பன்றிகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவாது.
மனிதர்களை இந்த வைரஸ் தாக்குவதில்லை என்பதால், பன்றி இறைச்சியை உண்பது மனித ஆரோக்கியத்திற்குப் பாதுகாப்பானது என வைத்தியர் உறுதிப்படுத்தியுள்ளார்.
சில சிறு அளவிலான பண்ணையாளர்கள் வீடுகளில் பன்றிகளை அறுத்து, அதன் கழிவுகளை நீர்நிலைகளில் அல்லது நீர்நிலைகளுக்கு அருகில் கொட்டுவதால் வைரஸ் மிக வேகமாகப் பரவக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
விலங்குக் கழிவுகளைப் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார வழிமுறைகளின்படி முறையாக அகற்றுமாறும், பண்ணைகளில் உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் பண்ணையாளர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


















