-அரசுக்கு 16 யோசனைகளை வழங்கியுள்ள ஐ.தே.க-
பேரிடரிலிருந்து மக்களையும், நாட்டையும் மீட்பதற்கு அரசியல் வேறுபாடுகளை களைந்து சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் எனக் கூறியுள்ள ஐ.தே.கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன, காலநிலை தற்போது இயல்பு நிலைக்கு திரும்புகின்ற சூழலில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பாரதூரமான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஐ.தே.க 16 யோசனைகளை முன்வைப்பதாகவும் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் காரியாலயத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, தற்போதைய நெருக்கடியான நிலையில் சகல தரப்பினரும் ஒன்றிணைந்து இணக்கமாக செயற்பட வேண்டும். கடந்த காலங்களிலும் இவ்வாறான இயற்கை அனர்த்தங்களை நாடு எதிர்கொண்டுள்ளது.
அப்போதைய சந்தர்ப்பத்தில் இக்கட்டான நிலைமை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறான அனுபவங்களை அரசாங்கம் ஒரு படிப்பினையாக கருத்திற்கொண்டு சகல தரப்பினரது ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் குறிப்பிட்டுக்கொள்கிறேன். நாட்டில் உள்ள 14,022 கிராம சேவகர் பிரிவுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போதைய நிலையில் அவசரகால சட்டத்தை தொடர்ச்சியாக அமுல்படுத்த வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் குறிப்பிட்டுக்கொள்கிறேன். தற்போதைய நெருக்கடியான நிலையில் இருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்கு சகல தரப்பினரும் அரசியல் வேறுபாடின்றி ஒன்றிணைந்து செ யற்பட வேண்டும். இதனைத் தவிர்த்து எவ்வித மாற்று வழியும் கிடையாது.
காலநிலை தற்போது இயல்பு நிலைக்கு திரும்புகின்ற சூழலில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பாரதூரமான பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடன் தீர்வு காணவேண்டும். இதற்கு பின்வரும் 16 யோசனைகளை ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் முன்வைக்கிறோம். 8000 கிராம சேவகர் பிரிவுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பை முழுமையாக அறிக்கையிடல், சேதமடைந்துள்ள சகல கைத்தொழில்களுக்கும் நிவாரண காலம் வழங்கல், பல்வேறுப்பட்ட வர்த்தக வங்கி கடன், குத்தகை கடன்களுக்கு 06 மாத நிவாரண காலம் வழங்கல், பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கான நட்டஈட்டை விரைவாக வழங்கல்,முழுமையாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கான நட்டஈட்டை உறுதியாக அறிவித்தல், விவசாயிகளுக்கு காப்புறுதிக் கடன் வழங்கல், வீடுகளை புனரமைக்கும்போது பெற்றுக்கொள்ளும் அனுமதிப்பத்திரங்களுக்கான உரித்தினை பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் கிராமசேவகர் பிரிவுகளுக்கு வழங்கல், குடிநீர் விநியோகத்தை தூய்மைப்படுத்த நிவாரணமளித்தல், சமுர்த்தி மற்றும் அஸ்வெசும பயனாளர்களுக்கான கொடுப்பனவை இரட்டிப்பாக்குதல், உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், அரச சேவையாளர்களுக்கு விசேட கொடுப்பனவை வழங்கும் சுற்றறிக்கையை வெளியிடல், அரச அதிகாரிகள் மற்றும் முப்படையினர் சிறந்த முறையில் செயற்படுவதற்கான சூழலை ஏற்படுத்தல் உள்ளிட்ட யோசனைகளை அரசாங்கம் முறையாக செயற்படுத்த வேண்டும் என்றார்.
















