நாய்களை கொன்று இறைச்சியாக விற்பனை செய்ய முற்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கல்முனை மாநகரசபை எல்லைக்குட்பட்ட பெரிய நீலாவணை பகுதியில் நாய் ஒன்று தொங்கவிடப்பட்டு, தோல் உரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது.
அதன் அருகில், மற்றொரு நாய் காணப்படுவதுடன், றெஜிபோம் பெட்டி ஒன்றும் காணப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக நேற்று பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், பொலிஸார் துரித விசாரணைகளை ஆரம் பித்துள்ளனர். புத்தாண்டு காலப்பகுதியில் ஏனைய இறைச்சி வகைகளில் கலந்து மக்களுக்கு விற்பனை செய்யும் நோக்கில் நாய்கள் கொல்லப்பட்டு, தோல் உரிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களை கைது செய்வதற்கு பெரிய நீலாவணை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


















