-புதிய வழிகாட்டுதல் வெளியீடு-
அரசியல் மற்றும் சிவில் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தில் 3வது பிரிவின் கீழ் சந்தேகநபர்களை கைது செய்யும்போது பின்பற்றவேண்டிய புதிய வழிகாட்டு தல்களை பொலிஸ்மா அதிபர் வெளியிட்டுள்ளார்.
சிரேஷ;ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு மேற்படி வழிகாட்டல் எழுத்துமூலமாக வழங்கப்பட்டுள்ளது. மேற்படி சட்டப்பிரிவுகளின் பிரகாரம் ஒருவருடைய பேச்சு அல்லது அறிக்கை ஊடாக, போரைத் தூண்டுதல், அல்லது பாகுபாடு, பகைமை அல்லது வன்முறைக்கு வழிவகுக்கும் தேசிய, இன அல்லது மத வெறுப்பைத் தூண்டுதல் போன்ற காரணிகள் உள்ளனவா என்பதை ஆராய்ந்த பின்னரே ஒருவரைக் கைது செய்ய முடியும்.
அவ்வாறு ஒருவரைக் கைது செய்வதாக இருந்தால், அதற்கு முன்னதாகச் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி, சட்டப் பிரிவின் பணிப்பாளருக்குத் தெரியப்படுத்தி, முன்முயற்சியாக எழுத்துப்பூர்வ அனுமதியைப் பெறவேண்டும் எனவும் பொலிஸ்மா அதிபர், அறிவுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, தனிநபர்களுக்கோ அல்லது குழுக்களுக்கோ பொதுச் சமூகத்தில் மனவருத்தம் அல்லது அவமதிப்பு ஏற்பட்டாலோ, அல்லது தெய்வ நிந்தனை இடம்பெற்றாலோ அதனை மாத்திரம் ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் 3ம் பிரிவின் கீழ் கைது செய்வதற்கான காரணமாக கருதப்படக்கூடாது என வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை மீறிச் செயற்படுவது அல்லது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் மா அதிபர் எச்சரித்துள்ளார்.


















