நிர்மாணப் பணிகள் நிறைவடைந்தும் மக்கள் குடியேற்றப்படாத பல வீட்டுத் திட்டங்கள் நாடளாவிய ரீதியில் காணப்படுவதாக கூறியுள்ள வீடமைப்பு அமைச்சர் சுசில் ரணசிங்க, அதற்கான காரணத்தை கண்டறிந்து தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
பாராளுமன்றில் நேற்றுமுன்தினம் திலின சமரக்கோன் எம்பி எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். திலின சமரக்கோன் தனது கேள்வியில் சரியான, தகுதியான நபர்களுக்கு வீடுகளை வழங்கத் தவறியுள்ளதால் நிர்மாணிப்பு நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்ட பல வீட்டுத் திட்டங்கள் இன்னும் மூடிய நிலையிலேயே காணப்படுகின்றன.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குடியிருப்புப் பிரச்சினைகள் காணப்படும் இக் காலகட்டத்தில் கட்டப்பட்ட வீடுகள் மக்கள் குடியேறாத நிலையில் மூடிக் கிடக்கின்றன.
அந்த வகையில் அந்த வீடுகளை மீளப் பெற்று அரசாங்கம் தகுதியானவர்களுக்கு அதனைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமா என கேட்கிறேன் என்றார். அதற்குப் பதிலளித்து அமைச்சர் குறிப்பிடுகையில், கடந்த அரசாங்க காலத்தில் வறுமை நிலையில் உள்ள மக்களுக்கான வீட்டுத் திட்டங்களில் பெரும்பாலானவர்கள் அன்றைய அரசியல்வாதிகளுக்கு நெருங்கியவர்களாகவும் சற்றும் பொருத்தமில்லாதவர்களுக்கு அந்த வீடுகள் வழங்கப்பட்டுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம், ஹம்பாந்தோட்டை உட்பட பல மாவட்டங்களில் வீட்டுத்திட்டங்கள், நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையிலும் மக்கள் அங்கு குடியேறாத நிலை காணப்படுகின்றது. அந்த வீட்டுத் திட்டங்கள் பொருத்தமற்ற இடங்களில் நிர்மாணிக்கப்பட்டிருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு வேறு இடங்களில் வீடுகள் இருப்பதன் காரணமாகவே அவர்கள் அந்த வீட்டுத் திட்டங்களில் குடியேறாமல் உள்ளனர் என்பதை ஊகிக்க முடிகிறது.
உண்மையில் வீடு தேவையுள்ளோருக்கு இந்த வீடுகள் வழங்கப்பட்டுள்ளதா அல்லது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது தொடர்பில் ஆராய வேண்டியுள்ளது. அதேபோன்று கடந்த காலங்களில் வீடுகளை நிர்மாணிப்பதற்காக வீடமைப்பு அதிகாரசபை பல்வேறு கட்டங்களில் கடன்களை வழங்கியுள்ளது. அவ்வாறு கடன் பெற்றுக் கொண்டவர்கள் அந்த கடனை மீள செலுத்த தவறியுள்ளதால் வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை நிதி ரீதியில் பெறும் வீழ்ச்சியடைந்துள்ளது.
அந்தக் கடன்களை மீள அறவிடுவதில் பெரும் பிரச்சினைகள் காணப்படுகின்றன. அனுராதபுரம் மாவட்டத்தில் 1656 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு அதில் 973 வீடுகளின் நிர்மாணப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. எனினும் இதுவரை எவரும் குடியேறவில்லை.
அதற்கு பல காரணங்கள் உள்ளன. சில வீட்டு திட்டங்கள் வனப் பகுதியில் அமைந்துள்ளன. வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்கு கடன் வழங்கும்போது சம்பந்தப்பட்ட நபர் உண்மையில் அவருக்கு வீடு இல்லா விட்டால் அந்த இடத்தில் கிடுகு வீடு ஒன்றையாவது அமைத்துக் கொண்டு, அங்கு குடியேற முயற்சிப்பார்.
அவ்வாறானால் வீடு கட்டி முடிந்தும் அங்கு ஏன் மக்கள் குடியேறவில்லை? அதற்கு காரணம் அவர்களுக்கு வேறு இடத்தில் வீடு இருப்பதால்தான் என்பது தெளிவாகிறது. இத்தகைய பிரச்சினைகள் அனுராதபுரம் மாவட்டத்தில் மட்டுமன்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகின்றன என்றார்.


















