நிலாவரையில் இருந்து தொல்லியல் திணைக்களம் விலகி பிரதேச சபையிடம் அதனைக் கையளிக்க வேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் இடம்பெறும் தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸிற்கும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்திக்கும் இடையில் நேற்றைய ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தொல்லியல் திணைக்களம் தொடர்பில் காரசாரமான விவாதம் இடம்பெற்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வலிகாமம் கிழக்குப் பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் நிலாவரைப் பகுதி சுற்றுலா வலயமாக மேம்படுத்துவது பற்றி ஆராயப்பட்டதுடன், இப் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தின் தலையீடுகளால் அதனை முன்னேற்ற முடியாதுள்ளது என தவிசாளரினால் சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அபிவிருத்திக் குழுவின் தலைவர் ரஜீவன் தொல்லியல் திணைக்களத்தினால் இப்போது பிரச்சினை கிடையாது. கடந்த கால அரசாங்கத்தில் இடம்பெற்றது போல தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் இல்லை. நீங்கள் அரசியல் ரீதியில் குழப்பங்களை விளைவிக்க வேண்டாம் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
அபிவிருத்திக்குழுத் தலைவரின் கருத்துக்களை எதிர்த்த தவிசாளர் தொல்லியல் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்கள் பௌத்த பேரினவாத அடிப்படையில் கொண்டுள்ள கட்டமைப்பிலோ அல்லது அத் திணைக்களங்களுக்குக் குவிக்கப்பட்டுள்ள சட்ட அதிகாரங்களிலோ அரசாங்கம் மாற்றங்களை ஏற்படுத்தாது சம காலத்தில் அத் திணைக்களங்களால் எமது மக்களுக்கு பாதிப்பு இல்லை என்று கூறக்கூடாது.
எமது மக்கள் சம கால சமாளிப்புக்களை எதிர்பார்க்கவில்லை. மாறாக நிரந்தரத் தீர்வினை எதிர்பார்க்கின்றனர். தங்களுடைய கட்சி நாடாளுமன்றில் அறுதிப் பெரும்பான்மையுடன் உள்ளது.
இந்த நிலையில் சரியான சட்ட மாற்றங்களை இலகுவாகக் கொண்டுவந்து எமது மக்களுக்கு சரியான தீர்வுகளை முன்வைக்க முடியும். இப்போது பிரச்சினையில்லை என்பது பதில் அல்ல. சரியான தீர்வுகளே முக்கியம் என தவிசாளரினால் வாதிடப்பட்டது.
இதனையடுத்து அபிவிருத்திக் குழுத்தலைவர் நிலாவரையில் இருந்து தொல்லியல் திணைக்களத்தினை விலக்கி பிரதேச சபையின் கீழ் கொண்டுவருவதற்கான முடிவு எடுத்தமை குறிப்பிடத்தக்கது.


















