கிண்ணியா பிரதேசத்தில் நிலவும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் வேளாண்மை விவசாயிகளுக்கும் இடையேயான நீண்டகால நில மீட்புப் போராட்டம் இடம்பெற்றுவரும் நிலையில் நேற்று முன்தினம்; காலை 30 மாடுகள் வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளன.
கிண்ணியா குரங்குபாஞ்சான் இரட்டைக்குளம் பகுதியில் குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் இது குறித்து கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
தகராறில் 30 மாடுகள் வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளன. 12 மாடுகளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் நான்கு மாடுகளைக் காணவில்லை எனவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாள்வெட்டுக்கு இலக்கான மாடுகள், கால்நடைகள் பராமரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, கிண்ணியா பிரதேச கால்நடை விவசாயிகளுக்கும் வேளாண்மை விவசாயிகளுக்கும் இடையிலான நில மீட்புப் போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில், 2876 ஹெக்டேயர் நிலம் மேய்ச்சல் தரைக்கு உரியது என மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த மே மாதம் 28 ஆம் திகதி தீர்ப்பளித்தது.
எனினும், தீர்ப்பைத் தொடர்ந்து, கிண்ணியா மற்றும் குறிஞ்சாக்கேணி கமநல சேவை நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகள், தங்களுக்குரிய விவசாய நிலங்களில் பயிர் செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கித் தொடர்ந்து விவசாயம் செய்ய அனுமதிக்குமாறு கோரி தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணங்க, நீதிமன்றத்தால் அடையாளப்படுத்தப்பட்ட குறித்த பகுதிக்குள் விவசாயிகளை வேளாண்மை செய்ய அனுமதிக்க வேண்டாம் என கமநல சேவை திணைக்களங்களுக்கு கிண்ணியா பிரதேச செயலாளரால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















