நீதிமன்றங்களில் இருந்து தனியாக சிறுவர்களை அழைத்துச் செல்வதற்காக மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைத் திணைக்களங்களுக்கு சிறுவர் நேய போக்குவரத்துச் சேவை திட்டத்தின் கீழ் நவீன ரக வாகனங்களை மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் வழங்கிவைத்தார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான இடங்களுக்கு அழைத்துச் செல்வதில் நிலவும் சிக்கல்கள் நீண்டகாலமாக விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டுவரும் ஒரு விடயமாகும். நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், சிறுவர் சந்தேக நபர்கள் மற்றும் சிறுவர் குற்றவாளிகள் தொடர்பில் நீதிமன்றம் ஒரு முடிவை எடுக்கும்வரை அவர்களை தற்காலிகமாகப் பாதுகாப்பான இடங்களிலும், தடுப்புக்காவல் நிலையங்களிலும் வைக்குமாறு நீதிமன்றங்கள் உத்தரவிடுகின்றன.
இவ்வாறு நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் சிறுவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணி பெரும்பாலும் சிறைச்சாலை திணைக்களத்தினாலேயே மேற்கொள்ளப்படுகிறது.
சிறைச்சாலைத் திணைக்களத்தின் மூலம் சிறைச்சாலை வாகனங்களில் சிறுவர்களை அழைத்துச் செல்லும் போது அவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுகின்றது. அதாவது சிறைச்சாலையின் பெயர் பொறிக்கப்பட்ட, ஏனைய கைதிகள் பயணிக்கும் பேருந்துகளில் சீருடை அணிந்த உத்தியோகத்தர்களால் சிறுவர்கள் அழைத்துச் செல்லப்படுதல், சிறுவர்களும் பெரியவர்களும் ஒரே வாகனத்தில் அழைத்துச் செல்லப்படுதல் மற்றும் சில சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்ட சிறுவனும், சிறுமியும் அக்குற்றத்தை புரிந்ததாக கருதப்படும் சந்தேக நபரும் ஒரே வாகனத்தில் அழைத்துச் செல்லப்படுதல் போன்ற பல சிக்கல்களுக்கு சிறுவர்கள் உள்ளாகுகிறார்கள். இத்தகைய காரணங்களினால் நீதி வழங்கும் பொறிமுறைக்குள்ளேயே சிறுவர்கள் மீளவும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படும்.
இந்த சிக்கல்களை கருத்திற்கொண்டு சிறுவர்களுக்கென பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட ‘சிறுவர் நேய போக்குவரத்துச் சேவை’ ஒன்றை உருவாக்குவதற்கு அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.
மேலும் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கின் போது, இச்சிறுவர் போக்குவரத்து தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டு சிறுவர்களுக்கென பிரத்தியேகமான சிறுவர் நேய போக்குவரத்துச் சேவையின் அவசியம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய சிறுவர் போக்குவரத்து முறையை ஏற்படுத்துவதன் முதற்கட்டமாக தென், சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வடக்கு ஆகிய 05 மாகாண சபைகளுக்காக 05 நவீனரக டொயோட்டா வேன்கள் வழங்கப்பட்டன.
வரவு – செலவுத் திட்டத்தில் மாகாண மட்டத்தில் வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கு 250 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஒரு மாகாணத்துக்கு ஒரு வாகனம் என்ற அடிப்படையில் 09 வாகனங்களுக்கும், 09 வாகனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.


















