டாக்கா, மிர்பூர் பங்ளா தேசிய கிரிக்கெட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 3 நாள் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட்களால் 17 வயதுக்குட்பட்ட இலங்கை அணி வெற்றிபெற்றது.
முதலாவது போட்டியில் 17 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணி 27 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது.
இரண்டாவது 3 நாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 17 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 122 ஓட்டங்களைப் பெற்றது.
ஹிமாரு தேஷான், மினுங்க நெத்சர, மனித்த ராஜபக்ச ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 17 வயதுக்குபட்ட இலங்கை அணி 7 விக்கெட்களை இழந்து 335 ஓட்டங்களைப் பெற்று முதல் இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது.
ரெஹான் பீரிஸ் 182 ஓட்டங்களைக் குவித்தார். ஜேசன் பெர்னாண்டோ 65 ஓட்டங்களைப் பெற்றார்.
17 வயதுக்குபட்ட பங்களாதேஷ் அணி 2 ஆவது இன்னிங்ஸில் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 278 ஓட்டங்களைப் பெற்றது.
இதில் கார்மோகர் 123 ஓட்டங்களையும் ஜுனைத் ஹொசன் 78 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஹிமரு தேஷான் 8 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
66 ஓட்டங்ககள் என்ற வெற்றி இலக்கை நோக்கி 2 ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய 17 வயதுக்குட்பட்ட இலங்கை அணி ஒரு விக்கெட்டை இழந்து 68 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. ஆட்டநாயகனாக ரெஹான் பீரிஸ், தொடர் நாயகனாக ஹிமரு தேஷான் தெரிவாகினர்.
















