பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ், யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி பொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை, எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்படி வழக்கு நேற்றுமுன்தினம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இதன்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியாரான பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். முறைப்பாட்டாளர் தரப்பில் ஆஜரான பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, குறித்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் பிரதிவாதிகளுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான திகதியை நிர்ணயிக்க முடியும் எனவும் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பிரதிவாதி தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், பிரதிவாதிகளால் கோரப்பட்ட சில ஆவணங்கள் இன்னும் கிடைக்கப்பெற வேண்டியுள்ளதாகவும், அதன் பின்னர் இந்த வழக்கு தொடர்பான சான்றுகளை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்தே எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி விசாரணையை எடுத்துக் கொள்ள மன்று உத்தரவிட்டது.


















