-11 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்-
மஹரகம – பன்னிப்பிட்டிய வீதியில் பணத்திற்காக மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டிரு ந்த குற்றச்சாட்டில் கைதான 13 இளைஞர்களை எதிர்வரும் 18ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொடை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மஹரகம, ஹோமாகம, மத்தேகொடை, கொட்டாவை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இளைஞர்கள் சிலர் மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டுள்ளதாக மஹரகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் 13 இளைஞர்களும் நேற்றுமுன்தினம் கைதுசெய்யப்பட்டனர். கைதான இளைஞர்களிடமிருந்து 11 மோட்டார் சைக்கிள்களும், ஒரு முச்சக்கரவண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. சந்தேகநபர்களை பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில், மன்று அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது. மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
















