எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை ஒன்றின் விலை 70 ரூபாவாக உயர்வடையும் என அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அன்டன் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் அவர் நடத்திய ஊடக சந்திப்பில் அவர் பேசுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு, மேலும் தெரிவிக்கையில்:
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை ஒன்றின் விலை 70 ரூபாவாக உயரும் அபாயம் உள்ளது. இதற்கு நாடு சந்தித்த வெள்ளம் அனர்த்தத்தால் பண்ணையில் வளர்க்கப்பட்ட சுமார் 28 இலட்சத்துக்கும் அதிக எண்ணிக்கையிலான கோழிகள் உயிரிழந்துள்ளமையேயாகும்.
இதனால் கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏனைய கால்நடை உற்பத்திகளும் இதனால் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.
கோழி இறைச்சியின் விலை தற்போது குறைவாக இருப்பினும், எதிர்வரும் பண்டிகை காலத்தின் போது கோழிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும். அத்தோடு இக்காலப்பகுதியில் கோழி இறைச்சியை உணவுக்குப் பயன்படுத்த வேண்டாம் என்ற வதந்திகளும் பரவி வருவதைக் காண முடிகிறது. எவ்வாறாயினும் நாம் வெள்ளத்தால் உயிரிழந்த கோழிகளை மனித நுகர்வுக்கு ஒருபோதும் பயன்படுத்துவதில்லை என்றார்.


















