நாட்டில் எரிபொருள் விலை உயர்வை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில், பாவனையாளர் அதிகாரசபையினர் நாடளாவியரீதியில் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல்களை ஆரம்பித்துள்ளனர்.
சந்தையில் பருப்பு, நெத்தலி மற்றும் தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக புறக்கோட்டை மொத்த வியாபாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனால் நுகர்வோர் பாதிக்கப்படுவதை தடுக்க, நாடளாவியரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளையும், விசாரணைகளையும் பாவனையாளர் அதிகாரசபை ஆரம்பித்துள்ளது. சில வர்த்தகர்கள் அத்தியாவசிய பொருட்களை பதுக்கிவைத்து செயற்கை தட்டுப்பாட்டினை உருவாக்கவும், அதிக விலைக்கு விற்பனை செய்யவும் முயற்சிப்பதாக பாவனையாளர் அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளதுடன், பண்டிகைக் காலத்தில் சந்தையில் இடம்பெறும் முறைகேடுகளை தவிர்க்கும் நோக்கில் வார இறுதி நாட்களிலும், அரச விடுமுறை நாட்களிலும், பாவனையாளர் அதிகாரசபை அதிகாரிகள் தொடர்ச்சியாக கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். நுகர்வோரும் தமக்கு இழைக்கப்படும் அநீதி தொடர்பாக அல்லது சந்தை முறைகேடுகள் தொடர்பாக 1977 என்ற இலக்கம் ஊடாக முறைப்பாடு வழங்கலாம் எனவும் அதிகாரசபை கூறியுள்ளது.


















