நோர்வூட்டில் வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்களை அதிக விலைக்கு விற்ற எரிவாயு விற்பனை முகவருக்கு எதிராக ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுவரெலியா மாவட்ட நுகர்வோர் சேவைகள் அதிகாரசபையின் தலைமை விசாரணை அதிகாரி ரவீந்திர ஹதுஹின்ன தெரிவித்தார்.
நோர்வூட்டில் சமையல் எரிவாயு இருப்புக்கள் பதுக்கி வைக்கப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுவதாக நுவரெலியா மாவட்ட நுகர்வோர் சேவைகள் அதிகாரசபைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதன்போது 12.5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றினை 4,000 ரூபாய்க்கு விற்றதாகவும் ரவீந்திர ஹதுஹின்ன கூறினார்.
நுவரெலியா மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் உள்ளிட்டோர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில், கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்கள் மீட்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, இது தொடர்பாக நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மேலும் அவர், நுவரெலியா மாவட்டத்தில் எரிவாயுவை பதுக்கும் வர்த்தகர்களைக் கண்டறியும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் ஆகிய இரண்டு வகையான சமையல் எரிவாயு கொள்கலன்களுக்கும் நாடு முழுவதும் பாரிய தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


















