பத்தரமுல்ல பகுதியில் ஒரு பெரிய பொது ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு வலயத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட, தியவன்னா ஓயாவின் இரு கரைகளிலும் ‘உல்லாசத் தீவு பொழுதுபோக்கு மையம்’ திட்டத்தை நகர அபிவிருத்தி அதிகார சபை ஆரம்பிக்கவுள்ளது.
இந்த திட்டத்திற்காக தியவன்னா ஓயாவை அண்மித்த 13.57 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட ஒன்பது காணித் துண்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் கொள்முதல் வழிகாட்டல்களுக்கு அமைய, சர்வதேச போட்டித்தன்மை வாய்ந்த ஏல நடைமுறையின் மூலம் இதற்கான முதலீட்டு முன்மொழிவுகளைக் கோருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அடையாளம் காணப்பட்ட ஒன்பது காணித் துண்டுகளும் பொழுதுபோக்கு மற்றும் ஓய்வுநேரச் செயல்பாடுகள் தொடர்பான திட்டங்களுக்காக நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்கப்படவுள்ளன.
இதேவேளை, தியவன்னா ஓயாவை அண்மித்த பத்தரமுல்லை சதுப்பு நிலப்பகுதியில் வெள்ளத் தடுப்பு மற்றும் அபிவிருத்திப் பணிகளை இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் ஏற்கனவே நிறைவு செய்துள்ளது.
குறிப்பாக, ‘வோட்டர்ஸ் எட்ஜ்’ விருந்தகத்தை சூழவுள்ள நீர்வழிகள் சீரமைக்கப்பட்டுள்ளன.
இது எதிர்கால பொழுதுபோக்குத் திட்டங்களுக்குப் பக்கபலமாக அமைவதோடு, திட்டப் பகுதியின் நிலைத்தன்மையையும் உறுதிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை தற்போது அனுமதி வழங்கியுள்ளது.


















