இலங்கைக்குள் முதலீட்டாளர்கள் அச்சமின்றி வரவேண்டும் என்றால் முதலில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் நான்காம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
அபிவிருத்தியில் நாங்கள் இப்போதுதான் முன்னேறி வருகின்றோம். அயல் நாடான இந்தியா நிதியை வழங்க முனைகின்றபோது ஏன் அதனை தடுக்கின்றோம்.
பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையம் என்ற தரத்திற்கு கொண்டு வர ஏன் மறுக்கின்றோம். காங்கேசன்துறை கப்பல்துறை முயற்சியை ஏன் மறுக்கின்றோம்.
தலைமன்னாரில் இருந்து இராமேஸ்வரம் செல்லும் கப்பல் போக்குவரத்து நிலைப்பாட்டை ஏன் மறுக்கின்றோம். சுற்றுலாத்துறையே எமது நாட்டுக்கு கைகொடுக்கின்றது.
இந்த விடயத்தில் எமக்கு உதவுவதற்கு இந்தியா வருகின்றபோது வடக்கு என்ற காரணத்தால் அதனை நிறுத்துகின்றீர்களா? இந்த விடயத்தை இனம் சார்ந்த விடயமாக பார்க்கின்றீர்களா?
இந்தியா தனது உதவியை நீட்டுகின்ற போது கைபிடித்து பொருளாதார நிலைமையை ஏற்படுத்துவதே சரியாக இருக்கும் இந்த விடயத்தில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும்.
இதேவேளை இந்த பொருளாதாரத்தில் இருந்து நாங்கள் மேம்பட வேண்டுமென்றால் பயங்கரவாத தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.
அப்போதே எமது முதலீட்டாளர்கள் வருவார்கள். அவர்கள் முதலீடு செய்யும்போது பயங்கரவாத தடைச்சட்டம் இருக்குமாக இருந்தால் அந்த முதலீடு எப்படி வந்தது?
அது புலிகளின் பணமா? என்று விசாரிக்கலாம் என்பதனால் எவரும் வருவதற்கு அச்சப்படுகின்றனர். நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்ற வேண்டுமென்றால் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும். இதனை நீக்குவதாக அரசாங்கம் கூறினாலும் ஒரு வருடம் கடந்தும் இன்னும் அந்த விடயத்தில் கவனம் செலுத்தப்படவில்லை என்றார்.


















