நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், அதனை நீக்குவதற்கான யோசனைகள் அடங்கிய தனிநபர் பிரேரணை ஒன்றையும் நேற்று நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் சமர்ப்பித்தார்.
இது குறித்து பாராளுமன்றில் நேற்று விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில், பயங்கரவாத தடைச்சட்டம் (தற்காலிக ஏற்பாடுகள்) (இரத்து) சட்டம் என்று தலைப்பிடப்பட்ட வகையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்யும் வகையில் தனிநபர் பிரேரணை ஒன்றை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் முன்வைத்துள்ளேன்.
1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம் இதனூடாக இரத்துச் செய்யப்படவேண்டும். இந்த தனிநபர் பிரேரணை தொடர்பில் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் பயங்கரவாத தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்படும் என்று வாக்குறுதியளிக்கப்பட்பட்டிருந்தது. ஆனால், அந்த நம்பிக்கை தற்போது மறக்கப்பட்டுள்ளது. ஆகவே, வழங்கிய வாக்குறுதிக்கமைய செயற்படுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.


















