-சூசகமாக கூறினார் நீதி அமைச்சர்-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 61வது கூட்டத்தொடருக்கு முன்னர் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான புதிய சட்டம் உருவாக்கப்படாது என நீதிஅமைச்சர் ஹர்ஷண நாணயக்கார கூறினார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி, அதற்குப் பதிலாக புதிய சட்டத்தைக் கொண்டு வருவதற்கான பொதுமக்கள் கருத்துக்கள் தற்போது கோரப்பட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் எதிர்வரும் 29 ஆம் திகதியுடன் நிறைவடையும்.
அதற்கமைய, பொதுமக்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டு, உத்தேச சட்ட மூலத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு கால அவகாசம் தேவைப்படும் என்றார்.
இந்நிலையில், எதிர்வரும் 23 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது. இதன்போது, இலங்கையின் முன்னேற்றங்கள் தொடர்பான அறிக்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பிலும் முன்வைப்புகள் எதிர்பார்க்கப்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பின்புலத்தில் இந்த தடவையும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல் தொடர்பில் இலங்கை சார்பில் எவ்வித முன்னேற்றங்களையும் சமர்ப்பிப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என்பதை அறியக்கூடியதாக உள்ளது.


















