பயணிகள் போக்குவரத்து சேவையிலுள்ள தனியார் பஸ் ஊழியர்கள் மீது மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை நடத்த இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இது குறித்து கடந்த வியாழக்கிழமை ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்த்தன கூறிப்பிடுகையில், மேல்மாகாணத்தில் தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு எதிராக மேல்மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைத் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் பல்வேறு அசௌகரியங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதனால் இவர்களின் இந்த நடவடிக்கைக்கு எதிராக எதிர்வரும் 20ஆம் திகதி மேல் மாகாணத்தில் பணிபகிஷ்கரிப்புக்கு செல்ல தீர்மானித்திருந்தோம். என்றாலும் பணி பகிஷகரிப்புக்கு செல்ல முன்னர் இதுதொடர்பில் மேல்மாகாண ஆளுநருடன் கலந்துரையாடி, அந்தக் கலந்துரையாடல் வெற்றியடையாவிட்டால், பணிபகிஷ்கரிப்புக்கு செல்ல தற்போது தீர்மானித்திருக்கிறோம். இதுதொடர்பில் நாங்கள் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்திருக்கிறோம்.
மேல் மாகாணத்தில் கடந்த காலங்களில் ஒருபோதும் இல்லாத அளவுக்கு தற்போது பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் மேல்மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையினால் பல்வேறு கஷ்டங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
பஸ்ஸில் ஏற்படுக்கின்ற சிறியதொரு குறைபாட்டுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்துவருகிறார்கள். பொலிஸார் மேற்கொள்ள வேண்டிய பணியையே இவர்கள் மேற்கொண்டுவருகின்றனர். இவ்வாறு செயற்படுவதற்கு சட்டத்தில் அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.
ஆனால் இன்று மேல்மாகாணத்தில் பஸ் ஊழியர்கள் பல்வேறு தேவைகளோடு இருக்கிறார்கள். அவர்களுக்கு மலசலகூட வசதி இல்லை. பஸ் வண்டியை நிறுத்தி வைப்பதற்கு இடமில்லை. குடிநீர் வசதி இல்லை. இந்த வசதிகளை செய்துகொடுக்காமல் அசௌகரியங்களை ஏற்படுத்தி வருகிறார்கள்.எமக்கு தேவையான வசதிகளை செய்து தந்து, அதனை சட்டத்துக்குட்படுத்திய பின்னர் சட்ட ரீதியில் நடவடிக்கை எடுத்தால், அதற்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை. இன்று எங்களுக்கு பாரியளவில் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் இல்லாத பிரச்சினை இருந்து வருகிறது.
இவ்வாறான நிலையில், சிறிய தவறுக்கும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் சேவை தடை செய்யப்படுகிறது. அதனால் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராகவே பணி பகிஷ;கரிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்திருக்கிறோம். எனவே மேல்மாகாண ஆளுநருடன் இடம்பெறும் கலந்துரையாடலின் பின்னர் அது தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றார்.


















