-வடக்கு மாகாண ஆளுநர்-
-சப்தசங்கரி-
போரின் இறுதிக் கட்டத்தில் நான் கிளிநொச்சி மாவட்டச் செயலராகக் கடமையாற்றியவன் என்ற வகையில்,இப்பகுதி மக்கள் அனுபவித்த வேதனைகளை நான் நன்கறிவேனென குறிப்பிட்ட வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்பதே எமது நோக்கமெனவும் தெரிவித்தார்.
சிங்கப்பூரைச் சேர்ந்த திரு.திருமதி ரி.ரி.துரை குடும்பத்தினர் மற்றும் செல்வி சரசீஜா ராமன் ஆகியோரின் நிதிப் பங்களிப்பில் 181 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு நேற்று காலை கிளிநொச்சி மாவட்டச் செயலக திறன்விருத்தி நிலையத்தில் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இ.ஜெயசேகரத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் உதவிகளை வழங்கி வைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
எமது மண்ணையும் மக்களையும் நினைத்து சிங்கப்பூரிலிருந்து உதவும் இவர்களது நல்ல மனதுக்கு இறைவன் இன்னும் அதிக வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பான்.
இந்நிலையில் தெரிவு செய்யப்பட்டு உதவிபெறும் பயனாளிகளிடம் நான் அன்பாகக் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். உங்களுக்கு உதவி செய்யும் இந்தப் பரோபகாரிகளுக்கு நீங்கள் செய்யக்கூடிய ஒரேயொரு கைமாறு, இந்த உதவியைச் சரியாகப் பயன்படுத்தி, சமூகத்தில் நீங்கள் முன்னேறமடைந்து பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைவது மாத்திரமேயாகும்.
இத்திட்டத்தை ஒருங்கிணைத்துச் செயற்படுத்திய முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் ஜெயசேகரத்துக்கு எனது நன்றிகள். அவர் எதை ஆரம்பித்தாலும் அதனை முழுமையாக நிறைவேற்றாமல் ஓயமாட்டார் என்றார்.
வடக்கு மாகாணத்தில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 1000 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கும் இத்திட்டத்தின் முதல் கட்டம் கிளிநொச்சியில் நடந்த நிலையில் அடுத்தக்கட்ட உதவிகள் முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இ;டம்பெறவுள்ளன.
இந்த உதவித்திட்டத்துக்கு ஒரு கோடியே 46 இலட்சத்து 24 ஆயிரத்து 400 ரூபா செலவிடப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.


















