-கரைச்சி பிரதேசசபை நடவடிக்கை எடுக்க வேண்டும்-
-க.சபேஷன்-
கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் உள்ள வன்னேரிக்குளம் பகுதியில் வடக்கு மாகாண சபையினால் நிர்மாணிக்கப்பட்ட சுற்றுலா மையம் பயன்பாடற்று பற்றைகளால் சூழ்ந்தும், பராமரிப்பின்றியும் காணப்படுகின்றது.
வடமாகாண முதலமைச்சரின் அமைச்சின் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் 6 மில்லியன் ரூபாவில் குறித்த சுற்றுலா மையம் அமைக்கப்பட்டது.
கடந்த 27.05.2017 அன்று கரைச்சி பிரதேச சபையின் வன்னேரிக்குளம் சுற்றுலா மையம் அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனால் இது திறந்து வைக்கப்பட்டது.
திறந்து வைக்கப்பட்ட குறிப்பிட்ட காலத்தின் பின்னர் படிப்படியாக சேதமடைய ஆரம்பித்த குறித்த சுற்றுலா மையம் தற்போது முற்றுமுழுதாக செயலிழந்து காணப்படுகின்றமையை அவதானிக்க முடிகின்றது. வீதி, குடிநீர் திட்டம், தொழிற்சாலைகள், பேருந்து தரிப்பிடங்கள் உள்ளிட்ட பல்வேறு தேவைகள் இன்றும் காணப்படும் நிலையில், திட்டமிடப்படாததும், மக்களுக்கு அத்தியாவசியமற்றதுமான இவ்வாறான திட்டங்களை வடக்கு மாகாண சபை மேற்கொண்டுள்ளதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் வலுக்கின்றது.
இவ்வாறான வினைத்திறனற்ற அபிவிருத்திகளால் மக்களின் நிதி வீண் விரயமாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இனிவரும் காலங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகளாவது மக்களை நேரடியாக சென்றடைந்து, அவை பயன்மிக்கதாக அமைய வேண்டும்.
இவ்வாறு சேதமடைந்துள்ள சுற்றுலா மையத்தை மக்கள் பயன்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை கரைச்சி பிரதேச சபை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


















