-ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி அலவத்துவல தெரிவிப்பு-
மாகாணசபை தேர்தலை பழைய முறையில் நடத்துவதற்கு அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு பிரேரணை கொண்டுவந்தால், அதற்கு பூரண ஆதரவு வழங்க நாங்கள் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற 2026ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி செலவீன தலைப்பின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
நல்லாட்சி அரசாங்க காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறையில் தவறு இருக்கிறது. அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இந்தத் தேர்தல் முறை காரணமாக சபைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
சில சபைகளில் உறுப்பினர்களுக்கு அமர்வதற்கு இடமில்லை. அதனால் இந்த தேர்தல் முறையில் திருத்தம் மேற்கொண்டு, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு செல்வோம் என்றே நாங்கள் தெரிவித்தோம்.
ஆனால் அரசாங்கம் அதனை செய்யாமல் தேர்தலுக்கு சென்றது.
அதனால் அதிகமான உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்கு எந்த கட்சிக்கும் பெரும்பா ன்மை கிடைக்கவில்லை. அதனால் கட்சிகள் கூட்டிணைந்து அதிகமான சபைகளில் ஆட்சி அமைக்கப்பட்டது. இன்னும் சில சபைகளில் அரசாங்கம் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து, சபைகளில் இரகசிய வாக்கெடுப்பு நடத்தி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருந்தது. அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைத்த அதிகமான மன்றங்களின் வரவு செலவு திட்டம் தோல்வியடைந்துள்ளது.
தேர்தல் முறையில் திருத்தம் மேற்கொண்டு, இந்த தேர்தலை நடத்தியிருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது. அதனால் அடுத்த முறை தேர்தலுக்கு செல்ல முன்னர் இந்த தேர்தல் முறையில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
அதேபோன்று மாகாணசபை தேர்தலுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தேர்தல் நடத்துவதில்லை. இறுதியாக 2017ஆம் ஆண்டிலேயே மாகாணசபை தேர்தல் இடம்பெற்றது. மாகாண சபைகளில் அரசியல் ரீதியில் தீர்மானங்களை மேற்கொள்ள யாரும் இல்லை.
ஆளுநரால் அனைத்தையும் செய்ய முடியாது. அவர் ஜனாதிபதியின் பிரதிநிதியாகவே செயற்படுகிறார். இந்த தேர்தல் தாமதமாவதற்கு நாங்களும் பொறுப்புக்கூற வேண்டும். அதனால் எமது காலத்தில் ஏற்ப ட்ட அந்த தவறை திருத்தி, மாகாணசபை தேர்தலை நடத்தவேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறது. அதற்காகவே மக்கள் இந்த அரசாங்கத்துக்கு ஆணை வழங்கியுள்ளனர். அதனால் மீண்டும் எல்லை நிர்ணயம் பிரேரணை கொண்டுவந்து, தேர்தலை நடத்த முற்பட்டால், அது இடம்பெறப்போவதில்லை.
எனவே மாகாணசபை தேர்தலை பழைய முறையில் நடத்துவதற்கு அரசாங்கம் பிரேரணை ஒன்றை கொண்டுவந்தால், அதற்கு பூரண ஆதரவை வழங்க நாங்கள் தயார். விகிதாசார தேர்தல் முறை கூடாது என யாரும் தெரிவிக்கப்போவதில்லை.
விகிதாசார தேர்தல் முறையில் போட்டியிட்டே தற்போது ஆளும்கட்சி உறுப்பினர்களும் பாராளுமன்றத்துக்கு வந்திருக்கிறார்கள். அதனால் மாகாணசபை தேர்தலை தொடர்ந்தும் பிற்போடாமல், பழைய முறையிலாவது தேர்தலை நடத்த அரசாங்கம் நடவடிககை எடுக்க வேண்டும் என்றார்.


















