பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயதுச் சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை திணித்துவிட்டு நபரொருவர் தப்பிச்சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
ஹொரணையில் உள்ள பிரபல பாடசாலையில் ஏழாம் வகுப்பில் படிக்கும் மாணவர் நேற்று காலை அலுபோமுல்ல பகுதியில் இருந்து, பாணந்துறையிலிருந்து இரத்தினபுரி செல்லும் பேருந்தில் ஏறி மதகுருமார்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்துள்ளார்.
இதன்போது ரைகம பகுதியில், கருப்பு கால்சட்டை மற்றும் சிவப்பு ரி – சேட் அணிந்த ஒருவர் முன்பக்க கதவின் ஊடாக பேருந்தில் ஏறிய சிறிது நேரத்தின் பின்னர் சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை திணித்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.
இதனையடுத்து நோய்வாய்ப்பட்ட மாணவர் பாடசாலைக்கு சென்றவுடன் கண் பார்வை மங்கலாகி, தலைச்சுற்றல் மற்றும் சுயநினைவு இழப்பு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டமையினால் உடனடியாக வகுப்பு ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக பெற்றோருக்கு தகவல் வழங்கப்பட்டு ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பல பொலிஸ் குழுக்கள் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.


















