பாடசாலை சேவையில் ஈடுபடும் வேன்களுக்கு சி.சி.ரி.வி கமராவை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் போக்குவரத்தின் போது பெண்கள், சிறுவர்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல்கள், துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வரவுசெலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்:-
பாடசாலை போக்குவரத்து சேவைகள் மற்றும் அலுவலக போக்குவரத்து சேவைகளுக்கான வழிகாட்டல் நெறிமுறைகளை ஜனவரி மாதம் முதல் அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். பாடசாலை சேவையில் ஈடுபடும் வேன்களுக்கு சி.சி.டி.வி கமராவை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
போக்குவரத்தின் போது பெண்கள், சிறுவர்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல்கள், துஸ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன, எதிர்காலத்தில் அதனைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
இதற்குள்ள ஒரே தீர்வு பயணிகளைப் பலப்படுத்துவதாகும். ஒரு பெண்ணுக்கோ அல்லது ஒரு பிள்ளைக்கோ யாராவது பாலியல் தொல்லை கொடுக்க முயற்சித்தால், அதைக் கண்டும் காணாதது போல் இருக்காமல் அதற்கு எதிராகச் செயல்படும் மனிதர்கள் தேவை. ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் சரி. ஆனால் எமது பேருந்துத் துறையில் உள்ள சில மோசமான நிலைமைகள் காரணமாக இன்னொருவருக்காக முன்வருவதற்கு. மக்கள் பயப்படுகிறார்கள் என்றார்.


















