இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்கு இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் முன்வந்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களாக இலங்கையில் டிட்வா சூறாவளி காரணமாக நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கடும் மழை மற்றும் காற்று வீசி வருகின்றது.
இதனால் நிலச்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தங்களில் சிக்குண்டு 50 இற்கும் அதிகமானோர் உயிரை இழந்துள்ளதுடன், பலர் உடமைகளை இழந்து நிர்க்கதியாகியுள்ளனர்.
இந்தநிலையில் பாகிஸ்தான் சென்று ஒருநாள் மற்றும் முத்தரப்பு ரி-20 தொடரில் விளையாடிவரும் இலங்கை அணி வீரர்கள் தங்களுடைய கவலையை வெளியிட்டுள்ளதுடன், தங்களால் இயன்ற உதவிகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளனர். அதன்படி வழங்கப்படும் பாகிஸ்தான் தொடர் கட்டணம் மற்றும் போட்டி கட்டணத்தை நிவாரண பணிகளுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
குறித்த இந்தச் செய்தியை இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் சனத் ஜயசூரிய தன்னுடைய உத்தியோகபூர்வ சமுகவலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
















