-பெருமளவில் திரண்ட வாகன சாரதிகள்-
பிக்மீ செயலிக்கு எதிராக நுவரெலியா மாவட்டத்தில் முச்சக்கரவண்டி மற்றும் வாகன சாரதிகள் போராட்டம் ஒன்றை நடத்தினர்.
இந்த போராட்டமானது, நேற்று நுவரெலியா மாநகரசபை மைதானத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு நுவரெலியா – பதுளை பிரதான வீதியூடாக வாகனங்களில் கறுப்புக் கொடி பறக்கவிட்டு, வாகனத்தில் பேரணியாக பிரதான நகரை சுற்றி வந்து, அஞ்சல் நிலையத்திற்கு முன்பாக ஒன்றிணைந்து தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இறுதியில் தங்களுடைய கையெழுத்துக்களுடனான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினையும் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபருக்கும், நுவரெலியா மாநகரசபை முதல்வருக்கும், நுவரெலியா தலைமைப் பொலிஸ் பரிசோதகருக்கும் கையளிக்கப்பட்டது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட சாரதிகள் கருத்து தெரிவிக்கையில்,
பிக்மீ நிறுவனத்தின் முச்சக்கரவண்டிகள் உள்ளிட்ட வாகன சவாரிகளில் ஈடுபடுவோர் நுவரெலியாவிற்கு வெளி மாவட்டங்களில் இருந்து வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வந்து, இறக்கிவிட்ட பின்னர் மீண்டும் நுவரெலியாவிலிருந்து செல்லும் போதும் பிக்மீ செயலி மூலம் பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்கின்றனர்.
நுவரெலியாவில் ஆரம்பத்தில் பிக்மீ செயலி பாவனை குறைவாகக் காணப்பட்டது. ஆனால் இப்போது அனைவரும் நிரந்தர பயன்பாட்டில் உள்ளன.
குறிப்பாக சுற்றுலாப்பயணிகளும், பொதுமக்களும் அதனை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதன் காரணமாக நீண்ட காலமாக முச்சக்கரவண்டி மற்றும் ஏனைய வாகனங்களில் வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் நாங்கள் பெரும் பாதிப்பினை எதிர்நோக்குகின்றோம்.
மேலும், நுவரெலியா சுற்றுலாவிற்கு ஒரு பிரதான தளமாகும். இங்கே ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்த வண்ணமுள்ளனர். இவர்களிடம் பிக்மீ செயலி மூலம் இரகசியமான முறையில் பணப் பரிமாற்றம் செய்து ஏற்றிச் செல்கின்றனர்.
அத்துடன் கூடிய தூரத்திற்கு, குறைந்தளவு பணத்தை வாங்கிக்கொண்டு பயணத்தை ஆரம்பிக்கிறார்கள்.
இதுபோன்று செய்தால் காலை முதல் இரவு வரை இந்த தொழிலை நம்பியிருப்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
சாரதிகள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறும் கறுப்புக் கொடிகளை பறக்கவிட்டும், கோஷம் எழுப்பியும் சாரதிகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டும் வரையில் தொடர்ச்சியாக எதிர்வரும் நாட்களில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக நுவரெலியாவில் வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் சங்கம் தெரிவித்தது.


















