ஜனாதிபதி நிதியத்தின் நிதியை பெறும் வகையில் சேவைகள் பிரதேச செயலக மட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
எதிர்க்கட்சியினர் காலத்திற்கு காலம் ஒவ்வொரு விடயங்களை கதைத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது மக்கள் விடுதலை முன்னணியின் பெலவத்தை காரியாலயம் தொடர்பில் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
உங்கள் கட்சி அலுவலகங்களில் கடந்த காலத்தில் என்ன நடந்தது என சிந்தித்து பாருங்கள். குண்டர்களை எவ்வாறு தயார்படுத்துவது. அந்த குண்டர்களை எவ்வாறு வன்செயல்களில் ஈடுபட வைப்பது, மத்திய வங்கியில் கொள்ளையடித்த பணத்தை எவ்வாறு பங்கு போட்டு பிரித்துக் கொள்வது, இனவாதமான அரசியலை எவ்வாறு மேற்கொள்வது இவ்வாறான செயற்பாடுகளுக்கே பயன்படுத்தியுள்ளீர்கள்.
இதன்மூலம் கட்சி காரியாலயம் ஊடாக இந்த நாட்டை சுரண்டி மக்களை குட்டி சுவராக்கினீர்கள் என்பதை மக்கள் அறிவார்கள்.
பாராளுமன்ற செலவீனங்கள் சரியான முறையில் மக்களுக்கு பயனுள்ளதாக பயன்படுத்தப்பட வேண்டும்.நிதி ஓதுக்கீடு என்பது மக்கள் வரிப்பணத்தில் என்று கருதப்பட வேண்டும். ஆனால் எதிர்கட்சியினர் தமது சொந்த விடயங்களை கதைப்பதற்கும் சமூக ஊடகங்களில் பிரபல்யம் தேடவும் என தேவையற்ற விடயங்களுக்கே பயன்படுத்துகின்றனர். இந்த நடைமுறை மாற்றப்பட வேண்டும்.
ஜனாதிபதி நிதியம் 1978 இல் இருந்து ஜனாதிபதி செயலகத்தை மையமாக கொண்டு இயங்கியது. இதனை தற்போது நாடு முழுவதும் வியாபித்து உள்ளோம். 341 பிரதேச செயலகங்கள் மூலம் சேவைகள் வழங்கப்படுகின்றன.
அந்தப் பயனைப் பெற மக்களுக்கு போதுமான வசதி இதுவரை இருக்கவில்லை. 2025 ஆம் ஆண்டு 4535 விண்ணப்பங்கள் கிடைத்தன. 2024 ஆம் ஆண்டு காலத்தில் இதே காலப்பகுதியில் 2902 ஆக இருந்தது.
ஜனாதிபதி நிதியத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியும் அதிகரித்துள்ளது.
நாங்கள் இன, மத பேதமற்ற வகையில் எமது கொள்கைப் பிரகடனத்தில் கூறியதை எமது ஆட்சியில் அடைந்தே தீருவோம் எனக் குறிப்பிட்டார்.


















