-2026 ஜனவரியில் பணிகள் ஆரம்பமாகும்-
-தமிழரசுக் கட்சிக்கு உறுதியளித்தார் – ஜனாதிபதி அநுரகுமார-
-மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும் எனவும் உறுதியளிப்பு-
புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளதாக தமிழரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் – தமிழரசுக் கட்சிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது. சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முதலாவதாக தெரிவித்த விடயம், புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படும்; அதற்கான பேச்சுவார்த்தைகளை அடிப்படையாக வைத்து புதிய அரசியலமைப்பு துரிதமாக நடைமுறைக்கு வரும் என்பதே.
ஆனால் பதவியேற்று ஒரு வருடமாகியும் தமிழ்தேசியப் பிரச்சினைக்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறினோம். எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இது தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதாக ஜனாதிபதி எமக்கு உறுதியளித்தார்.
அத்துடன் அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒரு வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தலும் உள்ளூராட்சி தேர்தலும் நடத்தப்படும் என்று உள்ளது. இது தொடர்பாகவும் நாம் அவரிடம் கேட்டிருந்தோம். அதற்கு ஜனாதிபதி தெரிவித்தார். ‘நாங்கள் 50 சதவீதம் நிறைவேற்றியுள்ளோம். உள்ளூராட்சி தேர்தலை நடத்திவிட்டோம். மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு சொற்ப காலங்கள் உள்ளது. ஆனால் நாம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம்’ என்ற உறுதிமொழியை எமக்கு வழங்கினார். அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் நாம் ஜனாதிபதியுடன் பேசியுள்ளோம். அதற்கு ஜனாதிபதி அவதானம் செலுத்துவதாகவும் எம்மிடம் தெரிவித்தார். திருகோணமலை புத்தர் சிலை தொடர்பிலும் ஜனாதிபதிக்கு நாம் எடுத்துரைத்துள்ளோம். இதை வைத்து இனவாதத்தை தூண்டுவதற்கு அனைத்துப் பகுதிகளிலும் பலர் உள்ளனர்.
கடந்த இரு தினங்களிலும் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பௌத்த தேரர்கள் குறித்த பகுதிக்கு சென்று பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றனர். இவ்வாறான செயற்பாட்டுக்கு இடம்கொடுக்கக் கூடாதென்பது எங்களது திடமான கருத்து. ஆனால் அதேவேளையில், தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் விகாரைகளை அமைத்து ஆதிக்கத்தை காட்டுவது இனங்களுக்கிடையில் எவ்விதமான நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதை நாம் ஜனாதிபதிக்கு எடுத்துச் சொல்லியுள்ளோம் என்று சுமந்திரன் தெரிவித்தார்.


















