-பதவி மோகத்தில் இருக்கிறார் ஜனாதிபதி – அஜித் பி பெரேரா-
புதிய அரசியலமைப்பை உருவாக்குவரற்கு அரசாங்கம் எவ்வித ஆரம்ப நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என கூறியிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பிரேரா, புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான எண்ணக்கரு பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டது இன்றளவில் வெறும் அறிவிப்பாகவே காணப்படுகிறது எனவும் கூறினார்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளை விரைவுப்படுத்தி ஆட்சிக்கு வந்தவுடன் புதிய யாப்பினை உருவாக்குவதாக தேசிய மக்கள் சக்தி நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கியது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்து ஒருவருடம் நிறைவடைந்துள்ளது. ஆனால் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றியோ அல்லது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை நீக்கம் பற்றியோ பாராளுமன்றத்திலோ அல்லது பொது இடங்களிலோ ஏதம் குறிப்பிடவில்லை. நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி பதவியின் மோகத்துக்கு ஜனாதிபதியும் அடிபணிந்து விட்டார் என்றே தோன்றுகிறது.
கடந்த காலங்களில் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை நாட்டுக்கு சாபம், வெஷ;மினிஸ்டர் முறைமையிலான பாராளுமன்ற ஆட்சி முறைமை சிறந்தது என்று பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.ஆனால் தற்போது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை நீக்கத்தில் மௌனம் காக்கிறார்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும், மாகாணசபை முறைமை பலப்படுத்தப்பட வேண்டும். புதிய யாப்புருவாக்கம் தொடர்பில் எண்ணக்கரு பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என்று பிரதமர் பாராளுமன்றத்துக்கு அறிவித்தார், எவ்வித ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளும் எடுக்காத காரணத்தால் மூன்று மாதங்களுக்கு பின்னரும் அதே கேள்வியை கேட்டேன் அதற்கும் எண்ணக்கரு பத்திரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என்றே பதிலளித்தார்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் எண்ணக்கரு பத்திரம் சமர்ப்பிப்பு என்பது வெறும் அறிவிப்பாகவே காணப்படுகிறது. புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்குரிய ஆரம்பக்கட்ட எவ்வித நடவடிக்கைகளையும் அரசாங்கம் இதுவரையில் எடுக்கவில்லை.
நாட்டில் நடைமுறையில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணபதற்காக ஒட்டுமொத்த மக்களின் அபிலாசைகளையும் கோரி புதிய யாப்பினை உருவாக்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.ஓரிரு மாதங்களில் அரசியலமைப்பை உருவாக்க முடியாது. அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் வெளிப்படையான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
நடைமுறையில் உள்ள அரசியலமைப்பில் பல குறைப்பாடுகளில் காணப்படுகிறது. ஆகவே புதிய யாப்பினை உருவாக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் வெளிப்படையாக முன்னெடுக்க வேண்டும். பத்தரமுல்ல கட்சி காரியாலயத்தில் இருந்துக் கொண்டு யாப்புருவாக்க பணிகளை முன்னெடுக்க முடியாது என்றார்.


















