நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்ட நுண்கடன் மற்றும் கடன் ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டமூலம் தொடர்பாக ஸ்ரான்பர்ன்ஷ் இன்ரநெஷனல் ஸ்ரீலங்கா தனது கடுமையான கவலையை வெளியிட்டுள்ளது. கடுமையான ஒழுங்குமுறைத் தோல்விகளைச் சரிசெய்து, பாதிக்கப்படக்கூடிய கடன் பெறுபவர்களைப் பாதுகாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தச் சட்டம் அந்த நோக்கத்தை அடைவதில் கணிசமான பின்னடைவைக் கண்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஸ்ரான்பர்ன்ஷ் இன்ரநெஷனல் ஸ்ரீலங்கா மற்றும் ஏனையோரால் தாக்கல் செய்யப்பட்ட சட்டமூல சவாலுக்கு பதிலளிக்கும் வகையில் நுண்கடன் வணிகத்தில் ஈடுபடும் அனைத்து நிறுவனங்களும் சமமான ஒழுங்குமுறைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்மானித்தது.
எனினும் புதிய சட்டமானது குறித்த அரசியலமைப்பு முரண்பாடுகளையும் ஒழுங்குமுறை குறைபாடுகளையும் நிவர்த்தி செய்யத் தவறியுள்ளதாகவும் இது குறிப்பிடத்தக்க இடைவெளிகளை விட்டுச் சென்றுள்ளதாகவும் ஸ்ரான்பர்ன்ஷ் இன்ரநெஷனல் ஸ்ரீலங்காஇன் பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது.
இயற்றப்பட்ட இச்சட்டம் சில நிறுவனங்கள் ஒழுங்குமுறைப்படுத்தலில் இருந்து விலக்கு பெறுவதற்கு முன்னர் அனுமதிக்கப்பட்டிருந்த குறிப்பிட்ட வாசகங்களை நீக்கியுள்ளது. எவ்வாறாயினும் சமத்துவமற்ற விதிமுறைகள் தொடர்பாக உயர்நீதிமன்றத்தினால் கண்டறியப்பட்ட அரசியலமைப்பு முரண்பாடுகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.

















