இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் இலங்கைக்கு எடு த்து வரப்படவுள்ள புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசனம் பெப்ரவரி 4 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை கொழும்பு, ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையில் இடம்பெறவுள்ளது.
அதன் ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று ஜனாதிபதி அலுலகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த இடமான குஜராத்தில் 1960 களில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட புத்த பெருமானின் உடல் சார்ந்த புனித சின்னங்கள் இதுவரை இந்தியாவுக்கு வெளியே கொண்டு செல்லப்படவில்லை.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைய இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் விளைவாக, இந்த புனித சின்னங்களை தரிசிக்கும் அரிய வாய்ப்பு இந்த நாட்டு மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.
புனித சின்னங்களை பெப்ரவரி 4 ஆம் திகதி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதுடன், அன்றிலிருந்து, ஹுனுபிட்டி கங்காராம விஹாரையில் பொதுமக்களுக்கு புனித சின்னங்களை வழிபடும் வாய்ப்புக் கிடைக்கும்.


















