பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் 16 நாட்கள் கொண்ட வேலைத் திட்டம் நேற்று திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அறிவித்துள்ளமையை புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி பெரிதும் வரவேற்கிறது என அதன் தலைவி ரஞ்சனி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சகல சமூகங்களையும் சேர்ந்த பெண்கள் சம உரிமையுடன் அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமையை பெற்றுக்கொடுத்தல், சமூக ஆரோக்கியத்துடனும், சமூக பாதுகாப்புடனும் வாழக்கூடிய சமுதாயத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை பாராட்டுக்குரியது.
மேலும், பெண்களை இழிவுபடுத்தல், அவதூறுகளை எழுப்புதல், அவமானம் மிக்க பேச்சுகளுக்கு வழிவகுத்தல் போன்ற விடயங்களை கருத்தில்கொண்டு அவற்றிலிருந்து பெண்களை பாதுகாக்கும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமையை அறியமுடிகிறது.
அத்தோடு, இந்த செயல்திட்டத்தின் முதற்கட்டமாக, சமூகத்தில் பாலியல் வன்முறைகளுக்கு முகம் கொடுக்கும் பெண்கள் முறைப்பாடளிக்க மூன்று அவசர சேவை தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளமையும் சிறப்புக்குரியது.
அதன்படி, சமூகத்தில் பாலியல் ரீதியான வன்முறைகளுக்கு உள்ளாகும் பெண்கள், பொலிஸ் திணைக்களப் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் 109 என்ற இலக்கம், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான தேசிய உதவி சேவையின் 1938 என்ற இலக்கம், இலங்கைக் கணினி அவசர ஆயத்த அணியின் 101 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு தெரியப்படுத்த முடியும் என்பதும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இக்கட்டான சூழல்களை சந்திப்போர் துணிவோடு இவற்றை பயன்படுத்த வேண்டும் – என்றும் தெரிவிக்கப்படுகிறது.


















