பெருந்தோட்டப் பாடசாலைகளின் காணி உரிமைகளை உறுதிப்படுத்தல் மற்றும் அவைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய அவதானம் செலுத்தியுள்ளார்.
பெருந்தோட்டப் பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதற்காக, பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டனர். பெருந்தோட்டப் பாடசாலைகளின் அபிவிருத்திப் பணிகளின்போது மாவட்ட அபிவிருத்திக் குழுக்களுடன் இணைந்து செயற்படுமாறும், நிலவும் வெற்றிடங்களுக்கு அமைய எதிர்காலத்தில் ஆசிரியர் சேவைக்கு மேலதிக ஆட்சேர்ப்புக்கள் முன்னெடுக்கப்படும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பெருந்தோட்டப் பாடசாலைகளை அடையாளம் காணுதல், உட்கட்டமைப்பு வசதிகள், சுகாதார வசதிகள், பாதுகாப்பு மற்றும் பாடசாலைகளுக்குச் சொந்தமான காணி உரிமைகளை உறுதிப்படுத்துதல் போன்ற விடயங்கள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன், நிலவும் ஆசிரியர், அதிபர் மற்றும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் வெற்றிடங்களை நிரப்புதல் மற்றும் போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக்கொடுத்தல் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. பெருந்தோட்டப் பாடசாலைகளில் தரம் 13இல் கற்கும் மாணவர்கள் விஞ்ஞானம் மற்றும் கணிதத் துறைகளில் பயில்வதில் எதிர்நோக்கும் சிக்கல்கள் மற்றும் தொழிற்கல்வியைத் தொடரும்போது நிலவும் மொழிப் பிரச்சினைகள் குறித்து அதிகாரிகள் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.
மேலும், ஆசிரியர் பயிற்சிகளின்போது தமிழ் மொழிமூல ஒத்துழைப்பை வழங்க வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.
பெருந்தோட்டப் பாடசாலைகளின் காணி தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்போது மாவட்ட மட்டத்திலான தரவுகள் அவசியம் என்றும், டித்வா சூறாவளியினால் பாடசாலைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, இப்பாடசாலைக ளை மீள அமைக்கும்போது இடத்தின் பொருத்தப்பாடு குறித்துக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
இதற்கான தரவுகளை வினைத்திறனாகப் பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்குமாறு அவர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
















