-சு.பாஸ்கரன்-
கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பெரும்போக செய்கைக்கான கால்நடை கட்டுப்பாட்டுத் திகதி அறிவிக்கப்பட்டும் இதுவரை குறித்த பகுதிகளுக்கான கமக்கார அமைப்புக்கள் கமநல சேவை நிலையங்கள் இதுவரை கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமையினால் தினமும் இரவு பகலாக கட்டாக்காலி கால்நடைகளால் பெரும் போக பயிர்செய்கைகள் அழிக்கப்பட்டு வருகின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்பாசனக் குளமான இரணைமடுக் குளம் உள்ளிட்ட குளங்கள் மானாவரி நிலங்கள் உள்ளடங்கலாக சுமார் எழுபதாயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் பெரும் போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கால்நடைகள் கட்டுப்படுத்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டிருக்கின்ற போதும் இதுவரை கால்நடைகள் கட்டுப்படுத்தப்படவில்லை. இவ்வாறு கால்நடைகள் கட்டுப்படுத்தப்படாமல் கட்டாகாலிகளாக விடப்படும் கால்நடைகளால் பெருமளவான பயிர் அழிவுகள் ஏற்பட்டு வருகின்றன
குறிப்பாக இரணைமடுக் குளத்தின் கீழான பன்னங்கண்டி மகிழங்காடு சின்னக்காடு கோரக்கண் கட்டு ஊரியான் முரசுமோட்டை போன்ற பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள பெரும் போக நெற்செய்கைகளை தினமும் இரவு பகலாக கால்நடைகள் அழித்து வருகின்றன.


















