அரசாங்கம் தற்போது சமர்ப்பித்துள்ள வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் நாட்டை மீளக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியாது. அதனால் தேசிய வேலைத்திட்டம் ஒன்றை தயாரித்து புதிய வரவு செலவுத் திட்டம் ஒன்றை சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு – செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் உரையாற்றுகையில்:-
நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தங்களால் 15 இலட்சம் வரையிலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நேரத்தில் அரசாங்கம் தற்போது சமர்ப்பித்துள்ள வரவு செலவுத்திட்டத்தில் நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியுமா என்பது சிக்கலானது. பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீட்பதற்கு மேலதிகமாக நிதி செலவிட வேண்டும்.
இதனால் வரவு செலவுத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். அதேபோன்று இந்த நிலைமையில் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுடன் செல்லவும் முடியாது. இது தொடர்பிலும் அவதானத்தை செலுத்துமாறு கோருகின்றோம்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதனை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் அந்த வேலைத்திட்டங்களை தற்போது சமர்ப்பித்துள்ள வரவு செலவு திட்டத்துடன் மேற்கொள்ள முடியுமா என்ற பிரச்சினை இருக்கிறது. அதனாலே இந்த வரவு செலவு திட்ட அறிக்கையை தேசிய வேலைத்திட்டதுடன் தொடர்புபடுத்தியவாறு மீள் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கிறோம்.
கிராமங்களில் மக்கள் பெரும் அழுத்தங்களுடன் இருக்கின்றனர். உயிர்களை இழந்தும், சொத்துக்களை இழந்தும் இருக்கின்றனர். இந்த நேரத்தில் சுகாதார துறையினர் மற்றும் இராணுவத்தினர் பெரும் சேவைகளை செய்துவருகின்றனர். இவர்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.




















