-புத்திஜீவிகள், சட்டத்தரணிகள் 85 பேர் கூட்டாக கண்டிப்பு-
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் புத்திஜீவிகள், சிவில் மற்றும் பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள் உள்ளடங்கலாக 85 பேர் கூட்டாகக் கரிசனை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து சட்டத்தரணி பவானி பொன்சேகா, பேராசிரியர் சந்ரகுப்த தேநுவர, கலாநிதி ராதிகா குமாரசுவாமி, கலாநிதி நிமல்கா பெர்னாண்டோ, கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோர் உள்ளடங்கலாக புத்திஜீவிகள், சிவில் செயற்பாட்டாளர்கள், பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் உள்ளிட்ட 85 பேரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டிருக்கும் கூட்டறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
லண்டனில் உள்ள வோல்வர்ஹம்டன் பல்கலைக்கழக நிகழ்வில் பங்கேற்பதற்கு பொதுநிதியைப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் கணவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக இடம்பெற்றுவரும் வழக்குடன் தொடர்புடைய வகையிலேயே மைத்ரி விக்ரமசிங்க நிதிக்குற்றவிசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். லண்டன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அந்நிகழ்வில் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவுக்கு கௌரவ பேராசிரியர் பட்டம் வழங்கப்பட்டது.
லண்டன் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்ற பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க, தற்போது களனி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலமொழித்துறை சிரேஷ்ட பேராசிரியராகப் பணியாற்றிவருவதுடன் பாலினக்கற்கைகள் நிலையத்தின் ஸ்தாபகப் பணிப்பாளராகவும் உள்ளார். கற்பித்தல் மற்றும் ஆய்வுத்துறையில் சுமார் 3 தசாப்தங்களுக்கும் மேற்பட்ட அனுபவத்தைக்கொண்ட அவர், தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பாலின சமத்துவக் கொள்கை உருவாக்கம், அதுசார்ந்த பயிற்சி அளித்தல் மற்றும் செயற்திட்ட மதிப்பீடு என்பவற்றுக்குப் பெரும் பங்காற்றியுள்ளார்.
அதன்படி புத்திஜீவியும், சகலரதும் நன்மதிப்பைப் பெற்றவருமான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க தொடர்பான விசாரணை செயன்முறைகள் நியாயமானதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததும், உரிய நடைமுறைகளுக்கு அமைவாகவும் முன்னெடுக்கப்படவேண்டும். மாறாக அவ்விசாரணைகள் அத்துமீறல்களுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும், புத்திஜீவி ஒருவரின் கௌரவத்துக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் அமையக்கூடாது என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


















