பேரிடரினால் அழிவடைந்த வீதிகள், பாலங்களை மறுசீரமைப்பதில் அதிக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளை கோரியுள்ளார்.
போக்குவரத்து அமைச்சு மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,
சேதமடைந்த பாலங்கள், வீதிகளின் மறுசீரமைப்பிற்க்குத் தேவையான நிதி மற்றும் காலக்கெடு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன்போது மொத்தமாக சுமார் 247 கிலோ மீற்றர், நீளமான ஏ, பி, தர வீதிகள் சேதமடைந்துள்ளதுடன், சுமார் 40 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினார்.
அவசரகால நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கும், சமூகங்கள் அன்றாட நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கும் உதவும் வகையில், முக்கியமான போக்குவரத்துப் பாதைகளில் பழுதுபார்க்கும் பணிகளை விரைவுபடுத்துமாறு, ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.
















