-உயர் நீதிமன்றில் வழக்கு தொடர முஸ்தீபு-
டித்வா பேரிடரினால் மக்கள் உயிரிழந்தமைக்கு காரணம் அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தவறியமையே என குற்றஞ்சாட்டி அரசாங்கத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு எதிர்க்கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கி சுமார் 640க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த பாரிய அனர்த்தம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்திருந்த முன்னெச்சரிக்கைகளை அரசாங்கம் உரியவாறு கருத்தில் கொள்ளாது, அசமந்தமாகச் செயல்பட்டதாலேயே இவ்வளவு பெரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டது என எதிர்க்கட்சிகள் ஆதாரபூர்வமாகக் குற்றம் சாட்டுகின்றன.
மக்களின் அடிப்படை உரிமையான உயிர் வாழும் உரிமையைப் பாதுகாப்பதில் அரசாங்கம் தனது கடமையில் இருந்து தவறிவிட்டது என்பதை உயர் நீதிமன்றில் சவாலுக்கு உட்படுத்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தற்போதுள்ள சூழ்நிலை, 2019ம் ஆண்டில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின்போது ஏற்பட்ட நிலைமையுடன் எதிர்க்கட்சிகள் ஒப்பிடுகின்றன. அதாவது தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், அப்போதைய மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதால், ஈஸ்டர் தினத்தன்று அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அந்தப் பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிர் மற்றும் உடமை இழந்தவர்களுக்கு நீதி கோரி, அன்றைய அரசாங்கத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோன்றதொரு சூழ்நிலை தான் தற்போதும் ஏற்பட்டுள்ளது என எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. முன்னெச்சரிக்கைகளை அலட்சியம் செய்தமையால் 640க்கும் மேற்பட்டோர் உயிரிழக்க நேரிட்டது என்ற அடிப்படையில் அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளில் பிரதான எதிர்க்கட்சிகள் இணைந்து ஈடுபட்டுள்ளன. இதில் ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் அடங்கும். முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் சட்டத்தரணிகளுக்கிடையில் அவரது இல்லத்தில் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. அதேபோன்று, ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டத்தரணிகளும் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணிகளும் தனித்தனியே இந்த விடயம் குறித்து கலந்துரையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
















