பொதுப்போக்குவரத்தின் போது பயணிகளை சாரதி மற்றும் நடத்துனர்கள் மரியாதையாக நடத்த வேண்டும் என வடக்கு மாகாண குடிசார் அமைப்புக்களின் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கைதடியில் அமைந்துள்ள மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில், அண்மையில் கிறிசலிஸ் நிறுவனத்தின் அனுசரணையோடு இடம்பெற்ற மாகாண மட்ட ஊராட்சி முற்றக் கலந்துரையாடலின் போதே மேற்படி கோரிக்கையை இ.போ.ச மற்றும் தனியார் போக்குவரத்துச் சபைகளின் வடபிராந்திய பொறுப்பாளர்களிடம் முன்வைத்துள்ளது.
இது தொடர்பாக வடக்கு மாகாண குடிசார் அமைப்புக்களின் சம்மேளனத்தினர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணத்தில் பொதுப்போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுகின்ற அரச மற்றும் தனியார் பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பயணிகளை மரியாதையுடன் நடத்துவதில்லை.
சிறுவர்கள்,முதியோர்கள்,பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என எவரையுமே மதிக்காத நிலைமை தான் அதிகமாக காணப்படுகின்றது.மிக மோசமான முறையில் பயணிகள் நடத்தப்படுகின்றனர்.
எனவே பயணிகளை எப்படி கண்ணியமாக நடத்த வேண்டும் என்பது தொடர்பில் சாரதி மற்றும் நடத்துனர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும் என்றனர்.
இது தொடர்பாக கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த இ.போ.ச மற்றும் தனியார் பஸ் சேவைகளில் ஈடுபடுகின்ற வடமாகாணத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்கையில்,
பயணிகளை உரிய முறையில் நடத்துமாறு பஸ் உரிமையாளர்களுக்கு தெரிவித்து வருகிறோம். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக நடந்து கொள்கின்ற சாரதிகள் மற்றும் நடத்துனர்களை பணியில் இருந்து நீக்கி வருகிறோம். அதேநேரம் பஸ்களின் தரம் தொடர்பிலும் தற்போது கவனம் செலுத்தப்படுகின்றது. பாடசாலை மாணவர்களை அரச மற்றும் தனியார் பஸ்கள் இரண்டுமே ஏற்ற வேண்டும் என பணித்திருக்கின்றோம்.
தற்போது பொதுப்போக்குவரத்தில் பயணிகளுடைய நலன் தொடர்பிலும்,சாரதி மற்றும் நடத்துனர்களின் நடத்தை தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்படுகின்றது.பொதுமக்களுக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் ஆதாரத்துடன் முறையிட முடியும். அதற்கான வட்சப் இலக்கங்களை தனியார் மற்றும் அரச பஸ் சபைகள் அறிமுகப்படுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டனர்.


















