-தலைவர் எஸ் .விமலேஸ்வரன்-
-த.அம்பிகாவதி-
பொதுப்போக்குவரத்து ஊர்திகளில் பயணிகள் தமது விருப்பப்படி பயணிக்க முழுமையான உரிமை உண்டு என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் தெரிவித்தார்.
கொழும்பில் இருந்து தனியார் பேருந்தில் பயணித்து மன்னாரை வந்தடைந்த இரு பெண்கள், அதிகாலையில் தலைமன்னார் நோக்கிச் செல்வதற்காக அங்கிருந்த இ.போ.ச. பேருந்தில் ஏற முற்பட்ட சமயம், முன்னர் தனியார் பேருந்தில் பயணித்து வந்ததைக் காரணம் காட்டி, காப்பாளர் அவர்களை பேருந்தில் ஏற்றுவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள சம்பவம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.
அந்த அறிக்கையில்:
ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு குடிமகனும் தாம் விரும்பும் போக்குவரத்துச் சேவையைத் தெரிவுசெய்து பயணம் செய்வது அவர்களின் அடிப்படை உரிமையாகும். அதிலும் குறிப்பாக, அதிகாலை வேளைகளில் தொழில் நிமித்தமாகப் பயணம் செய்யும் பெண்கள் பொதுப் போக்குவரத்தில் பாதுகாப்பாகவும், கௌரவத்துடனும் பயணிப்பதற்கான சூழலை உறுதிப்படுத்துவது அனைவரதும் கடமையாகும்.
பெண் பயணிகளை ஏற்ற மறுத்தமை குறித்து எனது பணிப்புரைக்கமைவாக, உரிய விசாரணைகளை உடனடியாக மேற்கொண்ட மன்னார் சாலை முகாமையாளர், குறித்த இ.போ.ச. காப்பாளருக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், அவருக்கு ஒரு நாள் வேதனத்தைத் தண்டப்பணமாகவும் அறவிட்டார்.
பயணிகளின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய மன்னார் சாலை அதிகாரிகளுக்கு எமது நன்றிகள்.
இனிவரும் காலங்களிலும் பயணிகளிடம், குறிப்பாகப் பெண்களிடம் முறையற்ற வகையில் நடந்துகொள்ளும் அல்லது போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறும் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் தொடர்பில் பொதுமக்கள் எமது அதிகார சபைக்குத் தயக்கமின்றி முறைப்பாடுகளைத் தெரிவிக்க முடியும். அதற்காக விசேடமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 0719090900 என்ற இலக்கத்துக்கு வட்ஸ்அப் ஊடாகத் தகுந்த ஆதாரங்களுடன் உங்களின் முறைப்பாடுகளை அனுப்பி வைக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


















