இலங்கையில் ஆறாம் தர ஆங்கில மொழிப் பாடத் தொகுதியில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய இணையதள முகவரியைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) தற்போது முடக்கியுள்ளது.
இந்தப் பிரச்சனை அரசியல் ரீதியாகப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாடப்புத்தகத்தில் தவறுதலாக அச்சிடப்பட்ட இணையதள முகவரி, மாணவர்களுக்குப் பொருத்தமற்ற உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதாக முறைப்பாடு எழுந்ததை அடுத்து, இலங்கையின் அனைத்து இணைய சேவை வழங்குநர்கள் ஊடாகவும் அந்த தளம் முடக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, பிரதமர் ஹரினி அமரசூரிய உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று கோரியுள்ளார்.
ஒருவேளை அவர் பதவி விலகாவிட்டால், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவௌ இது குறித்து கருத்து தெரிவிக்கையில், கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தரப்பினர் திட்டமிட்டு செய்த ‘சதி நடவடிக்கையாக’ இது இருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தவறு எவ்வாறு நிகழ்ந்தது, இதன் பின்னணியில் வெளிச் சக்திகளின் தலையீடு உள்ளதா என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில், தேசிய கல்வி நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இந்தப் பாடப் புத்தகங்களின் விநியோகம் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.


















