நானும் எனது அரசாங்கமும் போதைப்பொருளுக்கு எதிராக மோதுவதற்கு தயார் என தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சிறைத்தண்டனை விதிக்கப்படுவோரில் 64 வீதமானோர் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்றும் குறிப்பிட்டார்.
போதைப்பொருளுக்கு எதிரான ‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய செயற்பாடு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் கொழும்பில் உள்ள சுகததாஸ உள்ளக அரங்கில் இன்று வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இங்கு உரையாற்றும்போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்காக பொலிஸ், இராணுவம், சுங்கம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் மற்றும் புலனாய்வு சேவைகளை உள்ளடக்கிய ஒரு தேசிய செயற்பாட்டு மையம் நிறுவப்படும் என்றார்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் உறுதிமொழியொன்றையும் எடுத்தனர்.
குறித்த உறுதிமொழியில்,
விஷப் போதைப்பொருள் உற்பத்தி, விநியோகம், விற்பனை, ஊக்குவிப்பு மற்றும் அவற்றுக்கு உடந்தையாக இருத்தலை முற்றுமுழுதாக எதிர்ப்போம் என்றும், அதனுடன் தொடர்பான நபர்களை சட்டத்தின் முன் நிறுத்த உதவுவோம் என்றும், விஷப் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு அதிலிருந்து மீள்வதற்கு உதவுவோம் என்றும், அவர்களை மீண்டும் சிறந்ததொரு சமூக வாழ்க்கைக்குத் திசை திருப்புவதற்கு உதவுவோம் என்றும் உறுதி செய்தனர்.
போதைப்பொருள் பாவனையை நாட்டில் இருந்து முழுமையாக இல்லாதொழிக்கும் பொருட்டு நாடும் ஒன்றாக என்ற தேசிய கண்காணிப்பு செயற்திட்டத்துக்காக ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. இந்த செயற்திட்டத்தை செயற்படுத்துவதற்காக தேசிய வழிநடத்தல் சபை ஒன்றை ஸ்தாபிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய தேசிய வழிநடத்தல் சபையானது போதைப்பொருள் வலையமைப்பை இல்லாதொழித்தல், போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளவர்களுக்கு புனர்வாழ்வளித்தல், போதைப்பொருள் ஒழிப்புக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளல், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கல், பொதுசன நிறுவனங்களை ஒன்றிணைந்து ஊடக கண்காணிப்புக்களை மேற்கொள்ளவுள்ளது.


















