இலங்கைக்கு போதைப் பொருள் விநியோகம் செய்யும் 29 முக்கிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல கூறினார்.
திருகோணமலையில் நடைபெற்ற முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத் திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் அவர் குறிப்பிடுகையில், கடந்தகால அரசாங்கங்கள் போதைப் பொருள் விநியோக வலைப்பின்னல்களில் கை வைக்கவில்லை.
ஆனால், தற்போதைய அரசாங்கம் விநியோகச் சங்கிலியின் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளவர்களைக் குறிவைக்கிறது. இந்தச் சங்கிலித் தொடர் கடற்கரையுடனோ அல்லது விமான நிலையத்துடனோ நின்றுவிடக் கூடாது. குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இந்தோனேசியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்குச் சென்று இதுவரை 29 முக்கிய விநியோகஸ்தர்களைக் கைது செய்துள்ளனர். அவர்கள் வாக்குமூலம் வழங்குவதால் சிலர் கலக்கமடைந்துள்ளனர்.
போதைப்பொருளுடன் தொடர்புடைய பாதாள உலகம் உள்ளது. பாதாள உலகத்துடன் தொடர்புடைய சட்டவிரோத ஆயுதக் கடத்தல் உள்ளது.
போதைப்பொருள், பாதாள உலகம் மற்றும் சட்டவிரோத ஆயுதங்கள் என இந்த ஒட்டுமொத்தக் கறுப்பு வணிகமும் நாட்டை ஆக்கிரமித்துள்ளது.
அரசியல் அதிகாரத்தின் பின்னணியில்தான் இது வளர்ந்தது. தங்களது தேர்தல் பிரச்சாரங்களை இந்தக் கறுப்பு வணிகத்தின் மூலம் வரும் பணத்தைக் கொண்டே அவர்கள் முன்னெடுத்தனர் என அவர் தெரிவித்தார்.


















